rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

உங்களிடம் உள்ளதா துடிப்பும் துள்ளலும்?


நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அவற்றைக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ... அதைச் செய்யுங்கள்!' என்பார் ரூஸ்வெல்ட். ஆளுமைத் திறன் என்ற வார்த்தைக்கு இதுதான் மிகச் சுருக்கமான விளக்கம்!பள்ளி-கல்லூரி மாணவர், வேலை தேடும் யுவதி, முதல் நாள் வேலைக்குச் செல்லும் இளைஞன், இரண்டு வருடக் காதலை வெளிப்படுத்த முனையும் காதலன், புரமோஷனுக்குக் காத்திருக்கும் நடுத்தர வயதினர், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், பேரன்-பேத்திகளிடம் தனது இமேஜ் வளர்க்க விரும்பும் தாத்தா- பாட்டி என எல்லோருக்கும் எங்கேயும் எப்போதும் ஆளுமைத் திறன் தேவை! கிட்டத்தட்ட நமது 95 சதவிகிதச் செயல்கள் நம் பழக்கவழக்கங்களை மட்டுமே அடிப்படையாகக்கொண்டவை. நம் பழக்க வழக்கங்களைத் தன்னிலை உணர்ந்த செயல்கள் (Automatic Conditioned Response)என்பார்கள். பழக்கவழக்கங்கள் என்பது வேறு, திறன்கள் என்பது வேறு. பழக்கம் பிறப்பில் இருந்தே வருவது. உதாரணமாக... இடது கைப் பழக்கம். திறன்கள் நாமாக வளர்த்துக்கொள்வது. ஓவியம் வரையைக் கற்றுக் கொள்வது.

உன்னை நீ அறிவாய்!

"ஆளுமை மேம்பாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறு பகுதிதான் மென்திறன்கள் எனப்படும் சாஃப்ட் ஸ்கில்ஸ். மற்றவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வது, சீரான உடைகளைத் தேர்வு செய்து அணிவது, உணவு அருந்தும் விதம், மற்றவர்களையும் தன்னைப்போல நினைக்கும் எம்பதி (Empathy) போன்ற மென்திறன்களை வளர்த்துக் கொண்டாலே நம் ஆளுமை சீர் பெற்றுவிடும். உங்கள் நேர்முகத் தேர்வின் வெற்றி 53% உங்கள் உடல் மொழியாலும், 40% நீங்கள் பேசும் முறையாலும், குரலில் தொனிக்கும் ஆர்வம் ஆகியவையாலும், 7% மட்டுமே பேசும் வார்த்தைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. நீங்கள் இருக்கையில் அமரும் முறையை வைத்தே, நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவர்தானா என்பதைத் தேர்வு நடத்துபவரால் தீர்மானித்து விட முடியும்!" என்கிறார் மனித வள நிபுணரும், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கேம்பஸ் இன்டர்வியூ தொடர்பான பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி இளைஞர்களைச் சந்தித்து வரும் ராமன்.

வார்த்தைகளுக்கு வேலை இல்லாத இடங்களில் அல்லது பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காத சமயங்களில், உங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியவைக்க உடல் மொழிதான் சிறந்த வழி.

நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுப்பது நல்லது.

மீண்டும் மீண்டும் ஒரே செய்கையை வெளிப்படுத்த வேண்டாம். அது பார்ப்பவர்களுக்கு 'போர்' அடிக்கும்.

உங்கள் உடல் மொழி ரொம்பவும் இயற்கையாக இருக்கட்டும். ஒத்திகை செய்ததை வெளிப்படுத்துவதுபோல இருக்க வேண்டாம்.

எதிரே இருப்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.அவர் கள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

உடல் மொழியைப் பொறுத்த வரையில் உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ, அது உங்கள் அசை விலும் தெரியும். ஆகவே, நேர்மை யாக இருங்கள்.

அமர்ந்திருக்கிறீர்களோ அல்லது நின்றிருக்கிறீர்களோ, உங்களின் உடல் மொழி ரிலாக்ஸ்டாக இருக்கட்டும். சட்டைப் பொத்தான்களுடன் விளையாடுவது, இடுப்பில் கைவைத்து நிற்பது போன்ற கோமாளித்தனங்கள் வேண்டாம்!

ஐ-கான்டாக்ட், கைகுலுக்கல்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், இவையெல்லாம் மிகச் சரியாகக் கையாளப்பட வேண்டும்.

விருந்து வித் வி.ஐ.பி!

ஆளுமைத் திறன் என்றதும் தகவல் தொடர்புத் திறன், உடல் மொழி, ஆடை நாகரிகம், தனி மனிதப் பண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் உணவு அருந்தும் 'டேபிள் மேனரிஸம்' என்பதில் அக்கறை காட்டுகிறோம்? தினமும் மூன்று வேளை உணவருந்தும் பழக்கம்கொண்டவர்கள் நாம். அந்தச் சமயங்களிலும் ஸ்கோர் செய்ய டிப்ஸ் தருகிறார் கோவை காருண்யா பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ஃபிராங்க்ளின் பிரின்ஸ்.

உணவு மேஜை மீது தட்டு, கரண்டி போன்றவற்றால் ஒலி எழுப்பாதீர்கள். அது அநாகரிகமான பழக்கம்.

வாய் நிறையச் சாப்பாட்டுடன் பேசாதீர்கள். ஒன்று, பேசிவிட்டுச் சாப்பிடுங்கள். அல்லது, சாப்பிட்டவுடன் பேசுங்கள்.

உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உணவை மெல்லுங்கள்.

சாப்பாட்டை அள்ளி வாயில் கொட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சமாக, நிதானமாகச் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டவுடன் கைகளில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை நக்குவது, பல்லிடுக்கில் நோண்டுவது போன்றவை அருகில் இருக்கும் யாருக்கும் அருவருப்பை ஏற்படுத்தும்.

யாரேனும் சாப்பிடும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். நீங்கள் ஏற்பாடு செய்த விருந்தென்றால், உங்கள் விருந்தினர் சாப்பிடத் துவங்கும் வரை நீங்கள் ஆரம்பிக்காதீர்கள். நீங்கள்தான் விருந்தாளி என்றால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து சிக்னல் வரும் வரை சாப்பிட வேண்டாம்.

விருந்துகளில் பெண்களுடன் சாப்பிட நேரும்போது, ஆண்கள் அவர்களுக்கு முதலில் பரிமாற வேண்டும்.

அடிக்கடி மற்றவர்களின் சாப்பாட்டுத் தட்டையோ அல்லது டேபிளையோ கவனிக்காதீர்கள். அது உங்கள் மீது ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.

ஒரே சமயத்தில் நிறைய உணவை உங்கள் தட்டில் கொட்டிக்கொள்ளக் கூடாது. கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தால் 'ஸாரி' என்று மென்மையாகத் தவிர்த்துவிடுங்கள்.

முன் பின் அறிமுகம் இல்லாத இடங்களில் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரியாமல் அல்லல்பட வேண்டாம்.

நிறுவனப் பணிப் பண்பாடு (Corporate Etiquette)

'Knowing is knowledge, Doing is skill' என்பார்கள். அப்படியான ஸ்கில் நிரம்பியவர்களைத்தான் இன்றைய கார்ப்பரேட் உலகம் வரவேற்கிறது. நிறுவனப் பணிப் பண்பாட்டுத் திறன்களை எப்படி வளர்த்துக்கொள்வது என்று கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வளத் துறை இயக்குநர் மற்றும் கார்ப்பரேட் டிரெய்னர் கவிதாசன் வழி சொல்கிறார்.

வெற்றி நோக்கிய உங்கள் பயணம், எவ்வளவு மெதுவானதாக இருந்தாலும், ஏதோ ஒரு முன்னேற்றம் அதில் இருக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேரும்போது, ஒருவர் குமாஸ்தாவாகச் சேர்வது அவரது தவறு கிடையாது. ஆனால், அவர் குமாஸ்தாவாகவே ஓய்வு பெற்றால், அது நிச்சயம் அவருடைய தவறுதான்.

நீங்கள் எவ்வளவு ஜாலி பேர்வழியாக இருந்தாலும், உங்கள் வேலையில் யாரும் உங்களைக் கேள்வி எழுப்பவோ, குறை கூறவோ முடியாதவராக இருங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், உங்கள் வேலை பாதிக்கப்பட்டால், அது ஒரு திறமையான ஊழியருக்கு அழகு அல்ல.

சக ஊழியர்களோடு ஈகோ பிரச்னை இருந்தாலும், அவற்றால் உங்கள் வேலை பாதிக்கப்படாமல் இருந்தால், நிர்வாகத்துக்கும் உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்.

அலுவலகத்தில் சிறியவரோ, பெரியவரோ, நமக்குத் தெரியாத விஷயத்தை யார் கூறினாலும், ஆர்வத்தோடு அதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு பொறுப்பான பதவியில் இருந்தால், அந்தப் பதவிக்கான மரியாதை உங்கள் செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.

புதியவர்களை வழிநடத்துங்கள். யார் நன்றாக வேலை செய்தாலும், மனம் திறந்து பாராட்டுங்கள். பாராட்டு, உங்களை மற்றவர்கள் மேல் கனிவும், அக்கறையும் உள்ளவராகக் காட்டும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் சிரித்த முகத்தோடு இருங்கள். கண் பார்த்துப் பேசுங்கள். அலுவலக நேரம் போக மற்ற நேரங்களில் நீங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பன்தான் என்று உங்கள் செயல்களில் காட்டுங்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அலுவலக கிசுகிசு (gossip) பேசாதீர்கள். அது, உங்களது கேரக்டரையே சிதைக்கக்கூடிய பழக்கம். உங்களை நம்பிக்கைக்குரியவராக அந்தக் குணம் என்றுமே அடையாளம் காட்டாது.

செல் போனால் சொல் போச்சு!

"இன்று உலகத்தை உங்களுடன் இணைக்கும் முக்கியமான மீடியம் செல்போன். உலகத்துக்கு உங்களைப்பற்றிய 'பிராண்ட் இமேஜ்' ஏற்படுத்துவதில் செல்போனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஆனால், நம்மவர்கள் மிக மோசமாகப் போங்கு வாங்குவது செல்போன் நாகரிகம் இல்லாமல்தான். பெரும்பாலான சமயங்களில் உங்கள் தோற்றம், திறமை குறித்து அறியாதவர்கள் உங்களுடனான ஒற்றைத் தொலைபேசி உரையாடல் மூலம், உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். எனவே, உங்கள் தொலைபேசி நாகரிகத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுங்கள்!" என்கிறார் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர் பிரபு.

கல்லூரி முடிந்து இன்டர்வியூ அல்லது வர்த்தகம் தொடர்பான அழைப்புகளுக்குக் காத்திருப்பவராக இருந்தாலோ, உங்கள் காலர் ட்யூன் தேர்வில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் 'ஹலோ' சொல்வதற்கு முன்னரே, உங்கள் காலர் டோன்தான் உங்களைப்பற்றிய ஒரு இமேஜ் ஏற்படுத்தும். 'வாடி வாடி நாட்டுக்கட்டை', 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா' என்று அல்லுசில்லு டோன்கள் உங்களுக்கு 'தரை டிக்கெட்' என்ற பட்டத்தை வழங்கிவிடும்!

காலர் டோன் விஷயத்தில் பெண்களும் அதீதக் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் காதலன் அல்லது கணவனுக்குப் பிடிக்குமே என்று 'கலாபக் காதலா!' என்று ஒலிக்கவிட்டிருப்பீர்கள். ஆனால், உங்களை அழைக்கும் அத்தனை ஆண்களும், நீங்கள் அழைப்பை ஏற்கும் வரை தான்தான் உங்கள் கலாபக் காதலன் என்ற கற்பனையில் திளைத்துக்கொண்டு இருக்கலாம். உஷார்!

நீங்கள் ஒருவரைத் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் அழைப்பு 'கால் வெயிட்டிங்'கில் இருந்தால், உடனே இணைப்பைத் துண்டியுங்கள். எதிர் முனையில் அவர் ஏதேனும் முக்கியமான தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருந்தால், உங்கள் அழைப்பு ஏற்படுத்தும் 'பீப் பீப்' ஒலி நிச்சயம் உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கும்!

கால் வெயிட்டிங் வந்தாலோ அல்லது உங்கள் அழைப்பு அட்டென்ட் செய்யப்படவில்லை என்றாலோ, உடனே மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருக்காதீர்கள். 'நான் இன்னார். இன்ன விஷயம் தொடர்பாகப் பேச விரும்புகிறேன்!' என்ற ஒரு வரி மெசேஜ் அனுப்பிக் காத்திருங்கள்.

பொது இடங்களில் ஸ்பீக்கர் போனில் பேசுவது, லவுட்ஸ்பீக்கரில் பாட்டு கேட்பது போன்றவை இங்கிதமான பழக்கமல்ல.

மருத்துவமனை, கோயில்கள், துக்க நிகழ்வுகள் போன்ற இடங்களில் தவறாமல் மொபைலை சைலன்ட் மோடுக்கு மாற்றுங்கள். அவசியமான அழைப்பென்றாலும், மெதுவாகப் பேசி, பிறகு அழைப்பதாகக் கூறுங்கள்.

எதிர்முனையில் பேசுபவர் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பேச ஆரம்பியுங்கள்.

அச்சுப்பிச்சு அலறல் ரிங்டோன்களை வைத்து, சுற்றியிருப்பவர்களைத் திகிலூட்டாதீர்கள்.

அலுவலகத்துக்கு என ஒலி குறைந்த புரொஃபைல்களை ஃபிக்ஸ் செய்துகொள்வதன் மூலம், உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றவர் கவனத்தைக் கலைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

24X7 தொடர்புக்குத்தான் அலைபேசிகள். ஆனால், 24X7 ம் அழைத்துக்கொண்டே இருந்தால், அவை அலர்ஜி பேசிகளாகிவிடும் என்பதை மறக்காதீர்கள்!

ஆள் பாதி ஆடை பாதி!

"நமது பெர்சனாலிட்டியைப் பிரதிபலிப்பதில் பெரும்பங்கு வகிப்பது, நாம் அணியும் ஆடைகள். நல்ல தரமான ஆடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். பளீர் நிறங்களைத் தவிர்த்து, மென்மையான நிறங்களையே உடுத்துங்கள். நடக்கும்போதும் நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுக்குச் சௌகரியமாக இருக்கிறதா என்று கவனியுங்கள். நிறைய நகைகள் அணிந்துகொள்ள வேண்டாம். உங்கள் முக அமைப்புக்கு ஏற்ற, ஹேர்ஸ்டைலைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாக, இன்றைய மாடர்ன் பெண்கள் புரொஃபஷனல் காரணங்களுக்காக நீளமான கூந்தலை விரும்புவது இல்லை. ஆனால், ஒழுங்காகப் பராமரிக்கப்படும் நீளமான கூந்தலும் அழகாக உங்கள் கடமையுணர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இவற்றையெல்லாம்விட முக்கிய விஷயம், பெர்ஃப்யூம் பற்றியது. அழுத்தமான நெடியடிக்கும் வாசனைத் திரவியங்களைத் தொடவே வேண்டாம். நேர்முகத் தேர்வின்போது, மோசமான பெர்ஃப்யூமால் வேலைவாய்ப்பு பறிபோனவர்கள் எல்லாம் உண்டு. சென்ட், பெர்ஃப்யூம் போன்றவற்றைவிட டியோடரன்ட் நல்ல பலனைத் தரும்!" என்று ஃபேஷன் டிப்ஸ் தருகிறார் ஃபேஷன் டிசைனர் தபு.

ஒல்லி ப்ளஸ் உயரமான உடல்வாகுகொண்டவர்கள் நீளவாக்கில் கோடுகள் போட்ட உடைகளைத் தவிர்த்து, அகலவாக்கில் கோடுகள் உள்ள உடைகளை உடுத்தலாம். ஃபுல் ஸ்லீவ் உடைகள், கான்ட்ராஸ்ட் நிறங்கள் இவர்களுக்கு அழகாகப் பொருந்தும். ஸ்லீவ்லெஸ் உடைகளைத் தவிர்ப்பது நலம். காட்டன் உடைகள் இவர்களுக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும்.

கொஞ்சம் குள்ளமாக, ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஒரே நிறத்திலான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் பெரும்பாலும், கழுத்துப் பகுதி அழகாக இருக்கும் என்பதால், அதை எடுப்பாகக் காட்டும் காலர் நெக் வகை உடைகளை அணியலாம்.

உயரமான, சற்றே குண்டான உடல்வாகுகொண்ட பெண்கள், அடர்த்தியான நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே விதமான பேட்டர்ன் உள்ள உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது, உடலைக் கொஞ்சம் ஸ்லிம்மாகக் காட்டும். டைட் ஃபிட்டிங் உடைகள், காலர், ஃப்ரில் போன்றவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.

குள்ளமான, குண்டான உடல்வாகு உடையவர்கள் பெரிய டிசைன்கள், ஸ்லீவ்லெஸ், ஃபுல்ஸ்லீவ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரே நிறத்திலான உடைகள், நீளவாக்கில் கோடு போட்ட டிசைன்கள் இவர்களுக்கு நன்றாக இருக்கும்.

மாடர்ன் தோற்றம் தரும் என்றாலும், அலுவலகம், கல்லூரி போன்றவற்றுக்கு இறுக்கமான உடைகள் அணிந்து செல்வது, மரியாதைக்குரியவர் என்ற இமேஜை உங்களுக்குத் தராமல் போகலாம். அதனால், இந்த விஷயத்தில் கவனம் தேவை