rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

நீங்களும் கலெக்டர் ஆகலாம்





நீங்களும் கலெக்டர் ஆகலாம்


ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளை அறிந்து கொள்ளும் முன் ஒரு செய்தி. இத்தேர்வு குறித்த சில அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்வது முக்கியம்.


பல்வேறு வகையான பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவர். நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் 12 மடங்கு எண்ணிக்கை அளவுக்கு முதன்மைத் தேர்வில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்குப் போட்டியாளரின் எண்ணிக்கை அமையும்.

முதல்நிலைத் தேர்வு என்பது போட்டியாளரின் எண்ணிக்கையை முறைப்படுத்தி முதன்மைத் தேர்வுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிய நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதி வெற்றிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. முதன்மைத் தேர்வுக்கு 2,000 மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 2,300 மதிப்பெண்களும் தேர்ச்சிக்காகக் கணக்கில் கொள்ளப்படும்.

பல்வேறுபட்ட துறைகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வாய்ப்பாக சிவில் சர்வீசஸ் தேர்வில் பரந்த அளவிலான விருப்பப் பாடங்கள் உள்ளன. அவற்றில் முதல்நிலைத் தேர்வுக்கென்று ஒன்றும் முதன்மைத் தேர்வுக்கென்று இரண்டுமாக இரு விருப்பப் பாடங்களைப் போட்டியாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்வதுதான் தேர்வுக்கான ஆயத்தங்களின் தொடக்க நிலையும் மிக முக்கியமான அம்சம் ஆகும். விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

தேர்வு செய்யும் விருப்பப் பாடத்தில் பரிச்சயம் மற்றும் அப்பாடத்தில் கல்வியறிவு. அடிப்படை ஈடுபாடு பாடத்திட்டத்தின் அளவு அப்பாடத்தில் வழக்கமாக அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பு. பாடத்திட்டத்துக்குத் தேவையான நூல்கள் கிடைக்கும் தன்மை.

முதல்நிலைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளிலிருந்து இப்போது தொடங்கலாம். முதல்நிலைத் தேர்வில் விருப்பப் பாடங்களுக்கு 300 மதிப்பெண்களும் பொது அறிவுப் பாடத்துக்கு 150 மதிப்பெண்களும் உள்ளன. விருப்பப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் உள்ளதால் அப்பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.

பல்வேறு பதில்களிருந்து ஒன்றைத் தெரிவு செய்திட வேண்டிய வினாமுறை என்பதால் ஆயத்த நிலையில் ஒரு பாடத்தின் அனைத்து அம்சங்களையும் ஆழ்ந்து அறிய வேண்டியது முக்கியம். முதலாவது சுற்றுத் தயாரிப்புக்கு 3 மாதங்களும் திரும்ப ஒருமுறை திருப்பிப் பார்த்துப் படிக்க ஒரு மாதமும் தேவை.

முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஆயத்தின்போது தொடக்கத்திலேயே கேள்விகளுக்கு விரைவாகப் பதில் எழுதிடப் பழகுதல் மிக முக்கியமான ஒன்றாகும். முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பெற்று அவற்றுக்கு விடையளித்துப் பார்க்க வேண்டும்.

இம்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆயத்தப் பணிகளின் போக்கை நெறிப்படுத்துவதுடன் தேர்வுகளில் விடையளிப்பதை மேம்படுத்தவும் உதவும். முதல்நிலைத் தேர்வில் உள்ள பொதுப்பாட வினாத்தாள் பரவலான பாடத்திட்டத்தைக் கொண்டது.

எனவே, தேர்வாளர்கள் முக்கியமான பகுதிகளை இனங்கண்டு அவற்றில் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பொதுஅறிவுத் தாளில் கணிதத்திறன் தொடர்புடைய வினாக்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் விடையளிக்க நல்ல பயிற்சி பெற வேண்டும்.

முதன்மைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் முதல்நிலைத் தேர்வு முடிந்த மாத்திரத்திலேயே தொடங்கப்பட வேண்டும். முதல்நிலைத்தேர்வு முடிவுற்ற தேதிக்கும் அத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதிக்கும் இரு மாதங்கள் இருக்கும். இக்கால அவகாசத்தை முதன்மைத் தேர்வின் இரண்டாவது விருப்பப் பாடத்துக்கான ஆயத்தப் பணிகளுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால் அடுத்த இரு மாதங்களைப் பொதுப் பாடங்கள் மற்றும் இன்னொரு விருப்பப் பாட ஆயத்தப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். தேர்வுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தை அனைத்துப் பாடங்களையும் திரும்பப் பார்த்துப் படிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதன்மைத் தேர்வுக்கு அதிகமான மதிப்பெண்கள் உள்ளதால் அத்தேர்வுக்கான ஆயத்தப் பணிகளும் மிக முக்கியமானதாகும். பொதுவாகப் போட்டியாளர்கள் ஆயத்தப் பணிகளை முடித்த பிறகு தயார்படுத்திய பாடங்களை ஒருமுறை திரும்பப் பார்ப்பதற்கு நேரமின்றி கஷ்டப்படுவதுண்டு. ஆயத்தப் பணிகளில் தொடக்க நிலையிலிருந்தே குறிப்புகள் எடுத்து வந்தால் இதைத் தவிர்க்கலாம்.

அத்துடன் பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை மேம்படுத்தவும் இது உதவும். மேலும் முக்கியமாக ஆயத்தம் செய்த பாடங்களைத் திரும்பப் பார்க்கும்போது நேரத்தைச் சேமிக்கும் வகையில் முழுப்பாடங்களையும் பார்க்கத் தேவையின்றி எடுத்த குறிப்புகளைப் பார்த்தாலே போதும் என்ற நிலைக்கும் உதவும்.

முதன்மைத் தேர்வில் பொதுப்பாடத் தாள் மிக அதிகமான பாடத்திட்டங்களைக் கொண்டது ஆகும். எனவே, ஒவ்வொரு பாடத்தையும் அதன் பகுதிகள் அனைத்தையும் முழுமையாகவும் ஆழமாகவும் தயாரிப்பது கடினம் என்பதை உணர்ந்து கொள்வது முக்கியம்.

திரும்பத் திரும்ப வினாக்கள் கேட்கப்படும் பகுதியை மிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். பிற பகுதிகளைப் பொருத்தவரையில், அப்பாடங்களில் அடிப்படை விஷயங்களை உணர்ந்து அது தொடர்புடைய அண்மைக்கால குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அறிந்துகொண்டு அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.

முதன்மைத் தேர்வில் கட்டுரைத்தாள் என்பது ஒரு தனித்தன்மை மிக்கது. பொதுத் தாள்களுக்குப் படிப்பது கட்டுரைத்தாளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரையை எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாக அமையும். நல்ல மதிப்பெண்களும் பெறலாம்.

திட்டமிடுதலிலும் கட்டுரைத் தரப்போகும் செய்திகளைக் குறிப்பெடுப்பதிலும் செய்திகளை அடுத்தடுத்து தரும் முறைகளை வகுப்பதிலும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்வதிலும் தீர்வு வழங்குவதிலும் கட்டுரை எழுதத் தொடங்கும் முன்னரே நேரத்தை செலவிட வேண்டும்.

வெற்றி பெறுவதற்கான அடிப்படை விஷயம் தொடர்ச்சியான கடின உழைப்பு.இத்தேர்வு முறையில் மொத்த காலஅளவு ஏறக்குறைய ஓராண்டு. இதைக் கருத்தில் கொண்டு இக்காலம் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டும். இத்தகைய சரியான வழியிலான கடின உழைப்பு எதிர்காலத்தில் வாழ்வில் உயர்வைத் தரும் என்பதில் துளியும் ஐயமில்லை

--