rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

செய்தி -- சின்னக் குயில் சித்ரா பாட வந்து 30 வருடங்கள் நிறைவு

சின்னக் குயில் சித்ரா பாட வந்து 30 வருடங்கள் நிறைவு


சின்னக் குயில் என்று திரைஇசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா இசையுலகுக்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
Singer Chitra
47 வயதாகும் சித்ரா, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, அஸ்ஸாமிஸ், பெங்காலி, படுகா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆறு தேசிய விருதுகளையும், 5 பிலிம்பேர் விருதுகளையும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார் சித்ரா.

சித்ராவை முதலில் அறிமுகப்படுத்தியவர் மலையாள பின்னணிப் பாடகர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்தான். 1979ம் ஆண்டு அட்டகாசம் என்ற மலையாளப் படத்தில் சித்ராவின் முதல் பாடல் இடம் பெற்றது. இருப்பினும் இந்தப் படம் 1983ம் ஆண்டுதான் வெளியானது. அவர் பாடிய முதல் பாடலில் இணைந்து பாடியவர் ஜேசுதாஸ் ஆவர்.

இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் சித்ரா. ரஹ்மானின் இசையில் அதிக பாடல்களைப் பாடியவர் சித்ராதான்.

கடந்த ஆண்டு மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடியுள்ளார் சித்ரா. திரையுலகில் பாட வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து பிப்ரவரி 15ம் தேதி கேரளாவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் சித்ரா.

இந்த நிலையில், இசைத் துறையில் ஏற்பட்டுள்ள அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வேலைவாய்ப்பில்லாமல் போய் விட்ட மற்றும் வயதான இசைக் கலைஞர்களுக்காக நிதி ஒன்றை அமைக்கவிருக்கிறார் சித்ரா.

இது குறித்து சித்ரா கூறுகையில்,

கேரள கேபிள் நெட்வொர்க் ஏசிவியுடன் சேர்ந்து துவங்கவிருக்கும் இந்த நிதியின் பெயர் ஸ்நேகா. இதன் மூலம் நிதி நெருக்கடியில் இருக்கும் கலைஞர்களுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்.

இசைத் துறையில் அதி நவீன தொழில்நுட்பத்தினால் ஏராளமான திறமையான கலைஞர்களும் வேலை இழந்துள்ளனர். முன்பெல்லாம் ஆர்கெஸ்ட்ராவுடன் தான் பாடல் பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது அப்படி இல்லை. கருவிகளுக்கு பதிலாக தொழில்நுட்பம் வந்துவிட்டது.

நம்முடன் யார் டூயட் பாடல் பாடியுள்ளார் என்பதையே பாடல் கேசட்களைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றார் சித்ரா.

சின்னக்குயிலை நாமும் வாழ்த்துவோம்!