rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

20-லிருந்து 30 வரை - இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை!



முதல் சிரிப்பு, முதல் காலடி, முதல் முத்தம், முதல் விமானப் பயணம் மாதிரி நம்ம வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒரு விஷயம் நாம வாங்கின முதல் சம்பளம். அது ஆயிரமோ, லட்சமோ... படிச்சு முடிச்சு, ஒரு வேலைல சேர்ந்து கையில வாங்குகிற அந்தச் சம்பளம் இருக்கே... ஆஹா, அது ஒரு தனி சுகம்! அது கைக்கு வர்றதுக்கு முன்னாடியே அந்தப் பணத்தை வச்சு என்னெல்லாம் பண்ணலாம்னு மனசுக்குள்ள ஒரு கோட்டையே கட்டி வெச்சிருப்போம்... அம்மாவுக்கு, அப்பாவுக்கு, கூடப் பிறந்தவங்களுக்கு, நண்பர்களுக்குனு ஒரு பெரிய பட்ஜெட்டே போட்டிருப்போம்.

முதல் சம்பளக் கனவுல இருக்கிற யார்கிட்டயாவது இப்போ போய், ''அப்பா, அம்மாவுக்கு செய்றதெல்லாம் இருக்கட்டும், உங்களோட பட்ஜெட்டுல சேமிப்பு, முதலீடுகளுக்கு எல்லாம் ஏதாவது ஒரு பங்கு இருக்குமா?''னு ஒரு கேள்வி கேட்டு பார்த்தா என்ன ஆகும்?

''இதெல்லாம் ஓவரா தெரியலையா? இத்தனை நாள் கஷ்டப்பட்டாச்சு. படிக்கும்போது கிடைச்ச பாக்கெட் மணிய வச்சு ஒண்ணுமே பண்ண முடியல. இனிமேதான் நெனச்சத பண்ணலாம்னு இருக்கேன். இப்ப போய் பேங்குல போடு, சேத்து வெச்சுக்கோன்னு சொல்லி போர் அடிக்காதீங்க''னு சொல்றதுக்குதான் நிறைய வாய்ப்பு இருக்கு. காரணம் இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டம் அப்படித்தான் இருக்கு.


எனக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் ஒருத்தன் படிச்சு முடிச்சு வேலையில சேர்ந்து கொஞ்ச காலம் கழிச்சு எங்கிட்ட வந்தான்...

''டாக்ஸ் ரொம்ப பிடிக்கறாங்க... 'பேசாம ஒரு வீடு வாங்கு, டாக்ஸ் பெனிபிட் கிடைக்கும்'னு சொல்றாங்க, வாங்கலாமா?'' என்று என்னிடம் கேட்டான்.

''அது இருக்கட்டும், என்ஜினீயரிங் படிக்கிறதுக்காக எஜுகேஷன் லோன் வாங்கி இருந்தியே, அதைக் கட்டி முடிச்சாச்சா?'

''அதுவா, அதை அப்பா பாத்துக்கறேனு சொல்லிட்டாரு. அவருதான் ஏதோ கட்டுறாரு...''

''லோனை நீயே கட்டினா என்ன? டாக்ஸ் பெனிபிட் கிடைக்குமே?''

இப்படி நான் சொல்லவும் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தவன் அதன் பிறகு வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு சென்றான். அப்போதும் கையிலிருக்கும் பிளாக் பெரி பழசாயிடுச்சு; புது ஆன்ட்ராய்ட் போன் வாங்கணும், எந்த கிரெடிட் கார்டு வாங்கலாம்... இது மாதிரியான விஷயங்களைத்தான் பேசினான்...

அந்தப் பையனுக்கும் புதுசா இப்பதான் வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கவங்களுக்கும் மூணே மூணு விஷயத்தை மட்டும் இங்க சொல்ல விரும்பறேன்.

முதல் விஷயம்: வீடு வாங்கணும், சொத்து சேக்கணும்ங்கறது எல்லாம் நல்ல விஷயம்தான். செய்ய வேண்டியதுதான். ஆனா அதனால வரக்கூடிய கடனையும் மனசுல வெச்சுக்கணும். குறைஞ்சபட்சம் பத்துப் பதினைஞ்சு வருஷமாவது கடனை ஒழுங்கா திருப்பிச் செலுத்தினாதான் வீடு சொந்தமாகும். 20 வருஷம்ங்கிற மாதிரி நீண்ட காலக்கெடுவில் கடன் வாங்கினா, வாங்கின முதலை விட கொடுத்த வட்டி அதிகமா இருக்கும். பேங்குல கொடுக்கிறாங்க அப்படிங்கிறதுக்காக தேவைக்கு அதிகமான வீடோ, கடனோ வாங்கறது நல்லது இல்லை. கொஞ்சம் முன்பணம் ரெடி பண்ணிட்டு வாங்கினா கடன் சுமையும் குறையும், கேஷ் ஃப்ளோ கஷ்டமா இருக்காது, வேற முதலீடுகள் செய்ய வசதியா இருக்கும்.

வீட்டுக்கடனையும் வருமான வரிச் சலுகையையும் முடிச்சுப் போடறது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்ல. ஏன்னு கேக்கறீங்களா? வீடு வாங்கினா, கடனைத் திருப்பிச் செலுத்தும் போது கட்டற வட்டிக்கு (sec 24) வருமான வரிச் சலுகை உண்டு. 'வட்டி'ங்கறது என்ன? ஒரு செலவு. நம்மளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்காத, சொத்தா சேராத ஒரு தண்டச் செலவு. இல்லையா?

ஒரு சின்ன கணக்குப் போடுங்க... ''வீட்டுக்கடனுக்காக பத்து ரூபாய் வட்டியா கட்டறோம்னு வச்சுக்கோங்க. அந்த பத்து ரூபாயை வட்டியா கட்டறதுனால, மூணு ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்குது. சரியா? அப்போ, பாக்கி ஏழு ரூபாய்? தண்டச் செலவுதானே? மூணு ரூபாயைக் காப்பாத்துவதற்காக யாராவது ஏழு ரூபாய் செலவு பண்ணுவாங்களா? இது புத்திசாலித்தனமான வேலையா?

இரண்டாவது விஷயம்: ஒரு சின்ன கதை சொல்றேன்... ராமு, சோமு - ரெண்டு நண்பர்கள். ஒரே சமயத்துல படிப்பு முடிஞ்சு வேலைக்குச் சேர்றாங்க. ராமு ஆரம்பம் முதலே ஒரு சின்ன தொகையைச் சேர்த்து வச்சுக்கிட்டே வரான். அவனோட 20 வயசுல ஆரம்பிச்சு 30 வயசு வரைக்கும் மாசா மாசம் அப்படி 1,000 ரூபாய் சேர்த்துக்கிட்டே வந்தான். 30 வயசுல கல்யாணம் குட்டின்னு ஆன அப்புறம் சேமிக்கறதை நிறுத்திடறான். ஆனா சேர்த்து வச்ச பணத்தை அப்படியே வெச்சுக்கறான்.

அடுத்தது சோமு... படிச்சு முடிச்சு முதல் பத்து வருஷம் நல்லா வாழ்க்கையை அனுபவிக்கிறான். ஒரு பைசா சேர்த்து வைக்கலை. 30 வயசுல அவனுக்கும் கல்யாணம் ஆகுது. குழந்தை பிறக்குது. அப்புறம் பொறுப்பு வந்து, மாசா மாசம் 1000 ரூபாய் சேர்த்து வைக்க ஆரம்பிச்சுடறான். ரிட்டயராகும் வரைக்கும் தொடர்ந்து அந்தத் தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்கிறான்.

இப்போ இந்த ரெண்டு பேருக்கும் 60 வயசு ஆகும்போது யாரு கையில நிறைய பணம் இருக்கும்? 'இதென்ன கேள்வி? கண்டிப்பா சோமுகிட்டதான் அதிக பணம் இருக்கும். அவன்தான் கொஞ்சம் தாமதமா ஆரம்பிச்சா கூட, விடாம ஒழுக்கமா பணம் சேர்த்து வெச்சுருக்கான். அவன்தான் பணக்காரன்' அப்படினு சொல்றீங்களா?

ஆனா அது உண்மை இல்லை! எப்படின்னு பார்க்கலாம்... ராமு மாசத்துக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பத்து வருஷத்துல சேர்த்த தொகை 1,20,000 ரூபாய். சோமு மாசத்துக்கு ஆயிரம் வீதம் 30 வருஷத்தில சேர்த்த தொகை 3,60,000 ரூபாய். இதுதானே நீங்க போட்ட கணக்கு?

அதுவே ரெண்டு பேரும் 8% வட்டி குடுக்கற முதலீட்டுல தங்களோட சேமிப்பை போட்டிருந்தா என்ன ஆகியிருக்கும் தெரியுமா? 60 வயசுல ராமு கையில 21.70 லட்சம் ரூபாய் இருக்கும். சோமு கையில 14.68 லட்சம் ரூபாய்தான் இருக்கும்!

ஆச்சரியமா இல்லை? இதைத்தான் Power of Compounding' அதாவது கூட்டுவட்டியோட சக்தி அப்படின்னு சொல்றோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே இந்த பவர் ஆஃப் காம்பவுண்டிங்தான் உலகத்தின் எட்டாவது அதிசயம்னு சொன்னாராம்! நம்ம முதலீடுகளுக்கு எவ்வளவு டைம் குடுக்கறோமோ அவ்வளவு நல்லது. ராமு மட்டும் நிறுத்தாம அதே தொகையை 60 வயது வரைக்கும் சேர்த்திருந்தான்னா அவன்கிட்ட 36.39 லட்சம் ரூபாய் சேர்த்திருக்கும்! சோமுவை விட இரண்டரை மடங்கு பணக்காரனா இருந்திருப்பான்.

அதனால இனிமேலாவது ஏதோ ஒரு தொகையை மாசாமாசம் முதலீடு பண்ணுங்க. உங்களுக்கு சின்ன வயசு, நிறைய காலம் இருக்குது. அதைச் சரியா பயன்படுத்திக்கோங்க!

கடைசியா மூணாவது விஷயம்: விலைவாசி விஷம் மாதிரி ஏறிக்கிட்டிருக்கு... நாளுக்கு நாள் நாட்டோட நிலைமை மாறிக்கிட்டே இருக்கு... இதையெல்லாம் சமாளிக்கணும்னா எல்லா விதமான முதலீடுகளும் அவசியம்.

'அய்யய்யோ... ஸ்டாக் மார்க்கெட்டா? ரொம்ப ரிஸ்க்குங்க. தங்கம், வெள்ளி எல்லாம் பொம்பளைங்க சமாசாரம். நம்பளுக்கு செட் ஆகாது. ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கெல்லாம் கைல பணம் வேணும், நல்ல கான்டாக்ட் வேணும்... இப்படி எல்லாம் சாக்கு போக்குச் சொல்லக்கூடாது. ரசம் வைக்க ணும்னா கொஞ்சம் புளி, கொஞ்சம் மிளகு, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் பெருங்காயம்னு எல்லாத்தையும் போடத்தானே செய்யணும்? புளியை வச்சு மட்டும் கொதிக்க விட்டா ரசம் எப்படி இருக்கும்?

உங்கமுதலீட்டு போர்ட்ஃபோலியோவில எல்லாவிதமான முதலீடுகளும் இருக்கணும். உடனடித் தேவைகளுக்கான முதலீட்டை  பேங்கிலோ, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்லயோ போடலாம். நாலைஞ்சு வருஷம் கழிச்சுத் தேவைப்படும்னு நினைக்கற பணத்தை பேலன்ஸ்ட் ஃபண்டுகள்லயோ அல்லது கம்பெனி டெபாசிட்கள்லயோ போட்டு வைக்கலாம். அஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான் தேவைப்படும்னு நினைக்கிற பணத்தை பங்குச் சந்தையிலோ அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்லயோ தங்கம், வெள்ளியிலோ, ரியல் எஸ்டேட்டிலோ பிரிச்சு முதலீடு செய்யலாம். அப்போதான் நம்மகிட்ட தேவையான நேரத்துல தேவையான அளவு பணம் இருக்கும்.

இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த முதலீடு ஒண்ணு இருக்கு! உலகத்திலேயே மிகச் சிறந்த முதலீடு நீங்களேதான்! உங்களோட அறிவு விரிவடைய, புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள, உங்கள் மேம்பாட் டுக்காக முதலீடு பண்றீங்க பாருங்க, அதுதான் சிறந்த முதலீடு. இதுவரைக்கும் எந்த ஃபண்ட் மேனேஜரும் பீட் பண்ண முடியாத வருமானம் கொடுக்கக் கூடிய முதலீடு உங்களோட அறிவுதான்.

அதனால் முதலில் உங்களுக்காக உங்களி டத்தில் முதலீடு செய்யுங்கள். செல்வந்தராக வாழ்த்துக்கள்!


Nandri - Vikatan