rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

என் மனைவியாய் உன்னைப் பார்க்காமல்!!!


http://1.bp.blogspot.com/_3BA7KTgeENE/SK40c4SlMfI/AAAAAAAAAI4/w3E8Alz-f1o/s400/P8150158.JPG

எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.
என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது 'இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க' என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.

பதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.
எனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.

என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!

அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.

இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!
என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.

ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது உன் கழுத்துச் சங்கிலி வங்கிக்குப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் என் மணிக்கட்டுத் தங்கத்தை அவிழ்க்க அனுமதித்ததில்லை நீ.
நான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.
என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். ஒருமுறை உனக்கான கால்வலி மாத்திரையைப் பார்த்தீர்களாவென்று என்னை நீ கேட்டதற்கு என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாய்.

பலருக்கு நடுவே உன் குழந்தை பாராட்டுப் பெறும் போது 'அவங்கப்பாவோட மூளை அப்படியே' என்று சொல்வதில் உனக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனால் உன்னை எங்கும் நான் முன்னிலைப்படுத்திப் பேசியதில்லை.
எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.

நம் குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கங்களில் உனக்குத்தான் அதிகப் பங்கு. அதற்குப் பாராட்டாத நான்... ஏதேனும் அவர்கள் குறும்பாய் செய்துவிட்டால் திட்டுவதற்கு மட்டுமே உன்னை அழைக்கிறேன்.

எங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.

பீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.
அவரைக்காய் பொரியல் வைக்கும்போது மட்டும் சிவப்பு மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.

என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.
ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.
உமா....
ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...

அப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்!
என் மனைவியாய் உன்னைப் பார்க்காமல்
உன் கணவனாய் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்

---------------------------------------------------------------------------------------------------------