மாம்பழமாம் மாம்பழம்
'சாமி, எனக்கு மனசே சரியில்லை. ஏதாவது வைத்தியம் சொல்லுங்க!'
தன்முன்னே குனிந்து வணங்கியவனைப் புன்னகையோடு பார்த்தார் ஜென் துறவி. 'நீ அநாவசியமாகக் குழம்பிப்போயிருக்கிறாய் மகனே, உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!'
'நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. தயவுசெஞ்சு எனக்கு உதவுங்க. இல்லாட்டி நான் என்ன நிலைமைக்கு ஆளாவேன்னு எனக்கே தெரியலை!'
'சரி. நான் உனக்கு ஒரு மருந்து தர்றேன்' என்றார் ஜென் துறவி.
'மருந்தா? நீங்க மந்திரம் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்!'
'மந்திரமும் ஒரு மருந்துதான், மருந்தும் ஒரு மந்திரம்தான்' என்று சிரித்தார் அவர். 'ஒரே ஒரு நிபந்தனை. இந்த மருந்தைச் சாப்பிடும்போது, நீ மாம்பழத்தைப் பத்தி நினைக்கவே கூடாது!'
'நல்லது குருவே' கும்பிடு போட்டுவிட்டு அவன் அந்த மருந்தை வாங்கிச் சென்றான்.
மறுநாள் காலை. குளித்துவிட்டு மருந்து சாப்பிட உட்கார்ந்தான் அவன். அதே விநாடி, அவன் மனம்முழுக்க மாம்பழங்கள் நிரம்பி வழிந்தன.
'என்னடா இது!' வெறுத்துப்போன அவன் அரை மணி நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்தான். அதே பிரச்னை.
அன்றுமுழுவதும் அவன் ஏழெட்டு தடவை மருந்தைக் கையில் எடுத்திருப்பான். ஒவ்வொருமுறையும் மாம்பழத்தை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
மாலை ஆனதும் மறுபடி குருவின் காலில் போய் விழுந்தான். 'நீங்க கொடுத்த மருந்தை என்னால சாப்பிடமுடியலை! ஏனோ அதைக் கையில் எடுக்கும்போதெல்லாம் மாம்பழ ஞாபகம் வருது!'
'எப்படி வராம இருக்கும்? நான் உனக்குக் கொடுத்த மருந்தே வெறும் மாம்பழச் சாறுதானே? அதோட வாசனை மூக்கைத் துளைக்கும்போது தானா மாம்பழத்தோட நினைவு வரும்!' தொப்பை குலுங்கச் சிரித்தார் குரு. 'எப்பவும் நீ நினைக்க விரும்பறதுதான் உன் மனசுல தோணுது. உனக்கு புத்தி சரியில்லைன்னு நீ நினைச்சேன்னா, அதான் உண்மை. புத்தி சரியா இருக்குன்னு நினைச்சேன்னா, அதுவும் உண்மைதான். நீ என்ன நினைக்கப்போறே?'
0 comments:
கருத்துரையிடுக