rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

ஒரு நல்ல நிர்வாகி





நல்ல நிர்வாகி

ஒரு முன்னணி நிறுவனத்திற்கு மேலாளர் பதவிக்கு நபர் தேவை என்று நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வந்தது. தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞன் ஒருவன் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்தான்.

அனைத்து தகுதிகளும் இருந்தபடியால் அனைத்து சுற்றுக்களிலும் சுலபமாக பாஸ் செய்துவிட்டான். இறுதி சுற்று வந்தது. நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனரே (CMD) நேரடியாக இம்முறை இன்டர்வ்யூ செய்ய வந்திருந்தார்.

அந்த இளைஞனின் ரெஸ்யூமை பார்த்தபோது, ஒரு விஷயத்தை அவர் கண்டுபிடித்தார். பள்ளிக் கல்வி முதல், பல்கலைக் கழக ஆராய்ச்சி வரை அனைத்திலும் அந்த இளைஞனின் மார்க்குகள் அபாரமாக இருந்தது.

"நீ படிப்பதற்கு கல்வி நிறுவனத்திடம் ஏதாவது ஸ்காலர்ஷிப் பெற்றாயா?"

"இல்லை" என்றான் அந்த இளைஞன்.

"அப்போ உனக்கு ஃபீஸை எல்லாம் யார் கட்டினது? உன் அப்பாவா?"

"இல்லை. அவர் என் சின்ன வயசுலயே காலமாயிட்டார். என் அம்மா தான் என்னை படிக்க வெச்சாங்க."

"உங்கள் அம்மா என்ன வேலை பாக்குறாங்க?"

"என் அம்மா எங்க தெருவுல இருக்குற வீடுகளுக்கு, துணிகளை துவைச்சு சலவை செய்து கொடுக்குறாங்க"

உடனே, அந்த இளைஞனின் கைகளை காண்பிக்குமாறு CMD பணிக்க, அவன் ஏதும் புரியாது கைகளை காட்டுகிறான். அந்த கைகள் மிருதுவாக பூப்போல இருந்தன.

"உங்க அம்மாவுக்கு அவங்க வேலைகள்ல எப்பாவாச்சும் நீ உதவியா இருந்திருக்கியா?"

"இல்லை. என் அம்மா அதை விரும்பமாட்டாங்க. என் கைகள் எப்பவுமே புஸ்தகத்தை மட்டுமே சுமக்கனும்னு சொல்வாங்க. நான் மேலும் மேலும் படிக்கணும். அதுவே அவங்களுக்கு போதும்னு சொல்வாங்க. அதுமட்டுமில்லாம, என் அம்மா என்னை விட வேகமா துணிகளை துவைப்பாங்க."

"சரி… உன்கிட்டே ஒன்னு கேட்டுக்குறேன். இன்னைக்கு நீ வீட்டுக்கு போனவுடன், உங்க அம்மாவோட கைகளை சுத்தம் பண்ணு. அதற்க்கப்புறம் என்னை நாளைக்கு வந்து பாரு…!"

சரியென்று சொல்லிவிட்டு அவன் வீட்டுக்கு கிளம்பினான். வேலை கிடைககும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாக நினைத்துக்கொண்டே வீட்டுக்கு சென்றான்.

வீட்டுக்கு திரும்பியவுடன், "அம்மா உன் கையை காட்டு. நான் கொஞ்சம் அதை வாஷ் செய்துவிடுறேன்" என்றான் மிகவும் சந்தோஷமாக.

அந்த தாய்க்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பக்கம் மகனின் இந்த திடீர் நடவடிக்கை புதிராகவும் இருக்கிறது. கைகளை மகனிடம் தயங்கியபடியே நீட்டுகிறார்.

உழைத்து உழைத்து ஓடாய்  தேய்ந்துபோன, தன் தாயின் கைகளை அந்த இளைன்ஞன், மெல்ல சுத்தம் செய்கிறான். அப்படி செய்யும்போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் அரும்புகிறது. அது அந்த கைகளில் துளித் துளியாய் விழுகிறது. இப்போது தான் முதன் முறையாக தன் தாயின் கைகளை அவன் கவனிக்கிறான். அந்த கைகளில் தோல் சுருங்கிப் போய், ஆங்காங்கே தோலுரிந்து, அதனால் ஏற்பட்ட காயங்களை. தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும்போது, வலி தாங்காமல் அந்த கைகள் லேசாக நடுங்குகிறது. அந்தளவு சில காயங்கள் சற்று கடுமையாக இருந்தது.

இப்போது தான் முதன் முறையாக அந்த இளைஞன் உணர்ந்துகொள்கிறான். அந்த கைகளால் தான் தன் தாய் தினந்தோறும் பல வீட்டு துணிகள் துவைத்து தன்னை ஆளாக்கினாள் என்று. தன்னை படிக்கவைக்க, பட்டம் வாங்க வைக்க, தன் தாய் கொடுத்த விலை தான் அந்த காயங்கள் என்று இளைஞன் புரிந்துகொள்கிறான்.

அமாவின் கைகளை சுத்தம் செய்த பிறகு, எதுவும் பேசாது மீதமிருந்த துணிகளை தானே துவைக்கிறான்.

அன்றைய இரவு தாயும் மகனும் நீண்ட நேரம் பேசிக்கொள்கின்றனர்.

அடுத்த நாள் CMD கூறியபடி அவரை பார்க்க செல்கிறான்.

அவனுடைய கண்களில் நீர்த்துளிகளை பார்த்தார் CMD. "நேற்று உன் வீட்டில் என்ன நடந்தது நீ என்ன கற்றுக்கொண்டாய் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டார்.

"நான் என் அம்மாவின் கைகளை சுத்தம் செய்தேன். பிறகு எஞ்சியிருந்த துணிகளை நானே துவைத்தேன்"

"குட். உன்னோட உணர்வுகளை சொல்லு…"

"முதலாவது – பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, பாராட்டுவது என்றால் என்ன என்று தெரிந்துகொண்டேன். என்னுடைய அம்மா மட்டும் இல்லை என்றால், இன்றைக்கு நான் இல்லை. ரெண்டாவது – அம்மாவுடன் அவரது வேலையை பகிர்ந்துகொண்டு அவருக்கு உதவியபடி அதை செய்ததில், ஒரு விஷயத்தை செய்து முடிப்பது எத்துனை கடினம் என்று புரிந்துகொண்டேன். மூன்றாவது – என் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு நான் மதிப்பளிப்பது, ஊக்கப்படுத்துவது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்துகொண்டேன்."

"இதை தான் நான் என் மேலாளரிடம் எதிர்பார்க்கிறேன். அடுத்தவர்களை மனம் விட்டு பாராட்டும் குணம் அவருக்கு இருக்கவேண்டும். பிறர் உணர்வுகளை, அவர்களது பணியின்  கடினங்களை அவர் புரிந்துகொள்ளவேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கையின் எல்லாம், பணம் சம்பாதிப்பது மட்டுமே லட்சியம் என்று நினைப்பவராக இருக்கக்கூடாது.  இந்த பிடி உன் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்." என்றார்.

அதற்க்கு பிறகு, அந்த இளைஞன் நன்றாக பணிபுரிந்து நல்ல பெயர் பெற்றான். அவனது டீமின் ஒவ்வொருவரும் உண்மையாக உழைத்து, நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஏற்படுத்தினர்.

நன்றாக பாதுகாக்கப்பட்டு, கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கப்படும் ஒரு குழந்தைக்கு, ஒரு உரிமையான – தான் தான் முதலில் என்கிற  – மனோபாவம் வளர்ந்துவிடுகிறது. ஆகையால், தன்னை ஆளாக்க தன் பெற்றோர் எடுக்கும் முயற்சிகள், கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கு தெரியாமலே போய்விடுகிறது. அவன் பிற்காலத்தில் வேலைக்கு சேரும்போது, எல்லோரும் தான் சொல்வதை கேட்க வேண்டும், தான் வைத்தது தான் சட்டம் என்று கருதக்கூடிய முரட்டுக் குணம் வந்துவிடுகிறது. அதுவும்  அவன் உயர்பதியில் வந்துவிட்டால், பிறரது கஷ்டங்களை முயற்சிகளை புரிந்துகொள்ளவே மாட்டான். அடுத்தவர் மீது எப்போதும் குற்றம் கூறிக்கொண்டே இருப்பான். இது போன்ற நபர்கள், கல்வித் தகுதியில் வேண்டுமானால் சிறந்து விளங்கலாம். வெற்றியும் அடையலாம். ஆனால் அந்த வெற்றி தற்காலிகமானதே. அவனுக்கு எதிலும் தான் ஜெயித்து விட்டோம் என்ற எண்ணமே வராது. அவன் உள்ளுக்குள் பொறாமையும், துவேஷமும் கொண்டு கருவிக்கொண்டே இருப்பான்.

உங்கள் குழந்தைகளுக்கு இப்படி கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து PROTECTIVE PARENTS ஆக இருந்து அவன் எதிர்காலத்தை பாழாக்காதீர்கள்.

உங்கள் குழந்தை வெள்ளி தட்டில் சாப்பிடலாம், கீபோர்ட் வாசிக்கலாம், நீங்கள் சிறுவயதில் அனுபவிக்க தவறிய சௌகரியங்கள் பலவற்றை அனுபவிக்கலாம். அவையெல்லாம் தவறல்ல. ஆனால், நீங்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது, அவர்களையும் சற்று ஊற்றச் சொல்லுங்கள். அவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை அவர்கள் அம்மா, அக்கா, இவர்களோடு சேர்ந்து கழுவக் கற்றுக்கொடுங்கள். இந்த வேலைகளை செய்ய உங்களால் தனியாக வேலைக்காரர்களை அமர்த்த இயலாது என்பதால் அல்ல. அவர்கள் மீது நீங்கள் சரியான அன்பை செலுத்தவேண்டும் என்பதற்காக.

"வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். எனக்கென்று எதுவுமில்லை. கடவுள் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்" என்று நினைப்பவர்கள், ஒரு கணம் அவங்கவங்க பெற்ற அம்மாவை போய் பாருங்க. அவங்க மடி மீது தலை வெச்சு கொஞ்ச நேரம் சாஞ்சுக்கோங்க. அதுக்கு ஈடு இணை இந்த உலகத்துல எதையாவது உங்களால சம்பாதிக்க முடியுமா… இல்லை காட்ட முடியுமா?