rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

தனியாரை போல் கலக்கும் கர்நாடகா; கலகலக்கும் தமிழகம்

தனியாருக்கு இணையாக, கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம், நவீன பஸ்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளில் அக்கறை காட்டுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், புதிதாக இயக்கிய பஸ்களையும் முறையாக பராமரிக்காமல், மக்களின் நம்பிக்கையை வீணடித்து வருகிறது.

தமிழகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட, எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்போக்குவரத்துக் கழகங்கள், தற்போது, 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்கின்றன.இலவச பஸ் பாஸ் அதிகளவில் வழங்கியது, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாதது உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என கூறப்பட்டாலும், முறையான பராமரிப்பின்மையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, வெளியூர்கள் செல்லும், 50 சதவீத பயணிகள், தனியார் ஆம்னி பஸ்களை அதிகளவில் பயன்படுத்துவதே, இதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. ஆம்னி பஸ்களிலும் சிறப்பு சீட்கள், படுக்கை, "ஏசி', கழிவறை உள்ளிட்ட, அதிநவீன வசதிகள், ரயில்கள் மற்றும் விமானத்திற்கு இணையாக உள்ளன.

தமிழக அரசு பஸ்களில், "ஏசி' வசதி இருந்தாலும், அவற்றில் முறையான பராமரிப்பின்மையால், துர்நாற்றம் வீசுவதால், குமட்டலுடன் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது."ஏசி' பஸ்களின் முன்பக்க கண்ணாடியை தவிர்த்து, பிற கண்ணாடிகள் உடைந்துள்ளன. அவை, அட்டை, இரும்பு தகடுகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. "ஏசி' வசதியிருந்தும், அனல் பறக்கும் காற்றுடன் இந்த பஸ்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.இன்ஜின் கோளாறு உள்ளிட்ட காரணங்களால், அரசு பஸ்களை குறித்த நேரத்திற்கு சென்று சேர்க்க, டிரைவர்களால் முடிவதில்லை. இதுவே, அரசு பஸ்களை காட்டிலும், ஆம்னி பஸ்களை மக்கள் நாடிச் செல்ல காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், தமிழக போக்குவரத்துக் கழகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.,) இயங்குகிறது. இப்போக்குவரத்துக் கழகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள், ஹைராவட், ராஜ ஹம்சா, மெர்சிடீஸ் பென்ஸ், சீத்தல், கரோனா அம்பாரி, கரோனா அம்பாரி சிலீப்பர் ஆகிய பெயர்களில், சாதாரண இருக்கைகள் முதல், "ஏசி' படுக்கை வசதிகள் கொண்டவையாக இயக்கப்படுகின்றன.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், இதுவரை, படுக்கை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பஸ்களை போல மூட்டைப் பூச்சி, விஷ வண்டு கடிகளும் கர்நாடக அரசு பஸ்களில் இருப்பதில்லை.பயணிகள் வசதிகளை மட்டுமே கருத்தில் கொண்டு, நவீன முறையில் கர்நாடக பஸ்கள் பராமரிக்கப்படுகின்றன.

இதனால், கர்நாடக அரசு பஸ்களில் பயணிக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். பெங்களூரு ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், கர்நாடக அரசு பஸ்களில் தான் பயணிக்கின்றனர்.கர்நாடக அரசு பஸ்கள், "கலக்கும்' நிலையில், தமிழக அரசு பஸ்கள், "கலகலத்து' வருகின்றன. அந்தளவிற்கு, தமிழகத்தில் அரசு பஸ்கள் பராமரிப்பு என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட புதிய பஸ்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து ஓட்டை, உடைசல்களாக மாறி வருகின்றன.

இந்தியாவில் முதலிடம் : கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகம் செய்த ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு திட்டம், 2006ல் இருந்தே கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படுகிறது.எலக்ட்ரானிக் மிஷினில் டிக்கெட் வழங்குவதும், இப்போக்குவரத்துக் கழகத்தில், 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பல, தமிழக அரசு பஸ்கள், இன்னும் இன்சூரன்ஸ் செய்யாமல் இயங்குவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாமல், பஸ்கள், "ஜப்தி' செய்யப்படும் நிலை தொடர்கிறது.ஆனால், 2002 முதல், கடந்த ஆண்டு வரை, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம், பயணிகள் இழப்பீட்டு தொகையாக, 3 கோடியே 23 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. பராமரிப்பு, நவீன மயம் மட்டுமின்றி இது போன்ற நடைமுறையாலும் இந்தியாவிலேயே முதலாவதாக கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் திகழ்கிறது. அதனால், மத்திய அரசின் பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது. நாள் தோறும், 6 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டி, லாபத்திலும் இயங்குகிறது